சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல் - அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்புக் கொள்ளப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) முன்னேற்றம் குறித்த விரிவான கலந்துரையாடல் நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்றது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் நீட்டிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொடர்பான மூன்றாவது மதிப்பாய்வு குறித்து தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே IMF உடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பாய்வின் விவரங்கள் இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமாக முன்னேற்றம் மற்றும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் அரசாங்கத்தின் ஈடுபாடு குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.
IMF நிர்வாகக் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், இலங்கை நீட்டிக்கப்பட்ட கடனின் நான்காவது தவணையான 333 மில்லியன் டாலர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், மாற்று நிர்வாக இயக்குநர் டாக்டர் P. K. G. ஹரிச்சந்திரா, பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவதன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |