சார்லஸ் மன்னர் அழைப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரிக்க வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியஸ்தர்களின் குழு
சார்லஸ் மன்னரின் அழைப்பை ஜோ பைடன் ஏற்க மறுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படும் மே 6ம் திகதி இன்னொரு விழாவில் பங்கேற்கும் பொருட்டு ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டதாகவும், இதனால் லண்டன் விழாவில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
@AP
இருப்பினும், பிரித்தானிய மன்னர் ஒருவரின் அழைப்பை ஏற்க மறுத்து, விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பது முறையல்ல என்பதால், முக்கியஸ்தர்களின் குழு ஒன்றை ஜனாதிபதி ஜோ பைடன் தமக்கு பதிலாக அனுப்பி வைக்க உள்ளார்.
அந்த குழுவில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் இடம்பெறுவார் என தெரியவந்துள்ளது. மேலும், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கும் குழுவினரை தெரிவு செய்து பின்னர் அறிவிக்க இருப்பதாகவும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
வருகையை உறுதி செய்யவில்லை
இதனிடையே, முடிசூட்டு விழாவில் பங்கேற்க முடிவு செய்தாலும், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றுவது சாத்தியமில்லை என்றே தெரியவந்துள்ளது.
@PA
முறைப்படி அழைப்பு விடுத்திருந்தும், ஹரி - மேகன் தம்பதி இதுவரை தங்கள் வருகையை உறுதி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால், ஹரி குடும்பத்தில் இருந்து எவரேனும் ஒருவர் உறுதியளிக்கும் வரையில் அரண்மனை அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, 5,000 மைல்கள் பயணப்பட்டு விழாவில் கலந்துகொள்ளும் ஹரி - மேகன் தம்பதிக்கு முறையான எந்த பங்கும் அளிக்கப்பட மாட்டாது என கூறப்படும் நிலையில், அவர்கள் சாதாரண சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் ஒதுக்கப்படுவார்கள் என்றே நம்பப்படுகிறது.