இறுகும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் களம்... விருப்ப வாக்குகள் எண்ணப்பட வாய்ப்பு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதிரடி திருப்பமாக மக்கள் விருப்ப வாக்குகள் எண்ணப்படும் நிலை உருவாகியுள்ளது.
அனுரகுமார வாக்கு சதவீதம்
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முன்னிலையில் இருந்து வருகிறார்.
தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது.
இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் அனுர சுமார் 2,707,105 வாக்குகள் (39.52 சதவீதம்) பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
மக்களின் விருப்ப வாக்குகள்
இரண்டாமிடத்தில் இருக்கும் சஜித் பிரேமதாசா 2,348,052 வாக்குகள் (34.28 சதவீதம்) பெற்று ஏறுமுகத்தில் உள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும்.
இதனால் தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தல் களம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்றே தகவல் வெளியாகியுள்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |