பிரித்தானிய இளவரசரை ஒப்படையுங்கள்: நெருக்கும் அமெரிக்க அதிகாரிகள்
பாலியல் துஸ்பிரயோக வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் அலுவலகம் அரிதிலும் அரிதான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இளவரசர் ஆண்ட்ரூவை இனிமேலும் பாதுகாப்பது முறையல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இளவரசர் ஆண்ட்ரூவின் ஒத்துழைப்பை கட்டாயப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு அமெரிக்க நீதித்துறை கடந்த ஆண்டு பிரித்தானிய உள்விவகார அலுவலகத்திற்கு பரஸ்பர சட்ட உதவி கோரிக்கையை அனுப்பியது.
பொதுவாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு நெருக்கமான மற்றும் நெகிழ்ச்சியான சட்ட அமலாக்கம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி பெறும் உறவு பேணி வருவதாக அமெரிக்க விசாரணை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வழக்குகளில் சட்ட உதவிகளை பரிமாறிக்கொண்டு வருவதாகவும், இதே நிலை நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ விவகாரத்தில் இதுவரை அதுபோன்ற பரஸ்பர சட்ட உதவி பரிமாற்றம் நடக்கவில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார்.
சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, சிறையில் மரணமடைந்த கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஒத்துழைக்க 61 வயதான இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
குறைந்தபட்சம் ஒரு சாட்சியாகவேனும் இளவரசர் ஆண்ட்ரூ ஒத்துழைக்க வேண்டும் என கடந்த ஆண்டில் இருந்தே அமெரிக்க விசாரணை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே வர்ஜீனியா கியூஃப்ரே என்பவர் அமெரிக்காவில் முன்னெடுத்த சிவில் வழக்கு ஒன்றையும் இளவரசர் ஆண்ட்ரூ எதிர்கொள்ள வேண்டும். தம்மை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என வர்ஜீனியா கியூஃப்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் அவ்வாறான ஒரு சம்பவம் தமது வாழ்க்கையில் நடந்ததே இல்லை என இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.