துரோகம் என குமுறும் ஜோ பைடன்... ஒபாமா உட்பட 30 கடந்த எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை
தேர்தலில் இருந்து விலகக் கோரி ஜோ பைடனுக்கு அழுத்தமளிக்கும் தலைவர்கள் எண்ணிக்கை பராக் ஒபாமா உட்பட 30 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் நெருக்கடி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான வார இறுதி நாட்கள் இதுவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
அவர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் 30க்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக முன்வந்துள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் Delaware நகரில் அமைந்துள்ள தமது குடியிருப்பில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமக்கு எதிராக எழுந்துள்ள இந்த அரசியல் நெருக்கடியால் அவர் கோவத்தில் உள்ளதாகவும், தமது கட்சியினர் மற்றும் தோழமை உறுப்பினர்கள் தமக்கு துரோகமிழைத்துள்ளதாக அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அவர் மிக விரைவில் அறிவிப்பார் என்றே தகவல் கசிந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவருக்கு ஆலோசனை அளிக்கும் குழு, அது தொடர்பில் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அறிவிப்புக்கு என உரிய நேரத்திற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜோ பைடனுக்கு எதிராக
இதனிடையே, வெள்ளிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில், ஜனநாயகக் கட்சி வாக்காளர்களில் 10க்கு 6 பேர்கள் தெரிவிக்கையில், கமலா ஹாரிஸ் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக மிளிர்வார் என வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அவரை அறிவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மட்டுமின்றி பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனும் தற்போது ஜோ பைடனுக்கு எதிராக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |