சகோதரருடன் திருமணம்... நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் அரசியல்வாதி
பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவர் எதிர்கொள்ள நேரிடும் என செனட்டர் டெட் க்ரூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெவ்வேறு சட்டங்களின் கீழ்
முற்போக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமர், தனது சகோதரர் அமெரிக்கக் குடியுரிமை பெறும் பொருட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ள நிலையிலேயே செனட்டர் டெட் க்ரூஸ் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ள க்ரூஸ், கூறப்படும் போலித் திருமணத்திற்காக ஓமரை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வெளிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஓமர் மூன்று வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியேற்ற விதிகளைத் தவிர்ப்பதற்காக, தெரிந்தே திருமணத்தில் ஈடுபடுவதை எந்தவொரு அமெரிக்கருக்கும் ஃபெடரல் திருமண மோசடிச் சட்டம் தடை செய்கிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களின் சட்டங்களும் நெருங்கிய இரத்த உறவினர்களுக்கு இடையேயான திருமணத்தை தடை செய்கின்றன.
மேலும், மினசோட்டா மாகாணம் இரத்த உறவுக்குள் பாலியல் உறவை ஒரு பெரும் குற்றமாகப் பட்டியலிட்டுள்ளது. அப்படியான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
அத்துடன், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாத தம்பதிகள் கூட்டாக ஃபெடரல் வரித் தாக்கல் செய்வதைத் தடைசெய்யும் மற்றும் 100,000 டொலர் வரை அபராதம் விதிக்கக்கூடிய வரி மோசடிச் சட்டத்தை க்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக ஓமரை வாட்டி வதைத்து வருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடந்த சமீபத்திய பேரணியில் பேசும்போது ஓமர் தொடர்பில் அந்த கருத்தைப் பரப்பிய பிறகு, அது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
குறித்த பேரணியில் பேசிய ட்ரம்ப், ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஓமர் இங்கே சட்டத்திற்கு புறம்பானவர், அவரை உரிய முறைப்படி வெளியேற்ற வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

உறுதி செய்யவில்லை
கடந்த 2020ல் முதல் முறையாக ஓமர் தொடர்பிலான இந்த குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வந்தது. சோமாலிய சமூகத் தலைவரான அப்திஹகிம் உஸ்மான், 43 வயதான ஓமர் தனது இரண்டாவது கணவரான அகமது எல்மி என்பவரை, அவர் அமெரிக்காவில் தங்குவதற்காகவே திருமணம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதை எந்த ஊடகமும் உறுதி செய்யவில்லை என்றும், ஆனால் அவர்களது திருமணச் சான்றிதழ் 2021ல் வெளியாகும் வரையில் வெளியுலகிற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஓமர் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம் மதச் சடங்கின்படி அகமது ஹிரிசியை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. விவாகரத்திற்கு பின்னர், ஓமர், அகமது எல்மியை மத அடிப்படையிலான சடங்குகள் ஏதுமின்றி திருமணம் செய்துகொண்டார், பின்னர் 2011-ல் இருவரும் பிரிந்துவிட்டனர்.
ஓமர் 2012-ல் ஹிரிசியுடன் மீண்டும் இணைந்தார், மேலும் 2017-ல் எல்மியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார். ஓமரும் ஹிரிசியும் 2018-ல் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

மீண்டும் 2019ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஓமர் தற்போது டிம் மைனெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான ஓமர் சோமாலியாவின் தலைநகரில் பிறந்தவர், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
12 வயதில் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்கு முன்பு, அவர் நான்கு ஆண்டுகள் அகதிகள் முகாமில் கழித்துள்ளார். ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துகொண்டதாக உறுதி செய்யப்பட்ட எந்த உத்தியோகப்பூர்வ ஆதாரங்களும் இதுவரை எவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |