ஜூலை முதல் ஒன்லைனில் வாங்கும் பொருட்களின் விலை உயர்வு
பிரான்சில், ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து ஒன்லைனில் ஆர்டர் செய்யும் பல பொருட்களின் விலைகள் உயர இருக்கின்றன. இந்த விலை உயர்வுக்கு முதல் காரணம், 22 யூரோக்களுக்கு குறைவான பொருட்கள் மீதான வாட் வரி விதிப்பின் விதிவிலக்கு முடிவடைவதாகும். பிரான்சில் வாட் வரி 20 சதவிகிதம் ஆகும்.
ஆனால், 22 யூரோக்களுக்கு குறைவான பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத நாடுகளிலிருந்து பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்படும்போது அவற்றிற்கு வாட் வரி கிடையாது என்ற சலுகை இருந்துவருகிறது. ஆண்டொன்றிற்கு 22 யூரோக்களைவிட விலை குறைந்த பல மில்லியன் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
22 யூரோக்களுக்கு குறைவான விலையுடைய பொருட்களுக்கு வாட் வரி கிடையாது என்பதால், 22 யூரோக்களுக்கு அதிகமாக விலை குறிப்பிட்டால் அவற்றிற்கு வாட் வரி செலுத்தவேண்டியிருக்கும் என்பதால், அவற்றை போலியாக 22 யூரோக்களுக்கு குறைவான விலையில் இறக்குமதி செய்யும் ஒரு மோசடி நடந்து வந்தது என்கிறார் ஐரோப்பிய ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர். ஆகவே, 22 யூரோக்களுக்கு குறைவான விலையுடைய பொருட்கள் மீதான வாட் வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது.
எனவே, புதிய விதிகளின்படி, இனி எல்லா பொருட்களுக்கும் வாட் வரி உண்டு. அதாவது 10 யூரோ மதிப்பிலான பொருட்களுக்கும் வாட் வரி உண்டு என்பதால், அது வரிகளையும் சேர்த்து 12 யூரோக்களுக்கு விற்கப்படும். இந்த பொருட்களை விற்பவரிடமிருந்து வாங்கி ஒன்லைனில் விற்கும் இணையதளங்கள் தாங்களும் வாட் வரி வசூலிக்கவேண்டும்.
அதாவது, அமேசான் முதலான பெரிய இணையதளங்கள், ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து வாங்கப்படும் பொருட்களை வாங்கி விற்பதால், அவை விநியோகஸ்தர்களாக கருதப்பட்டு வாட் வரி வசூலிக்கவேண்டிய நிலை உள்ளது.
ஆக, 22 யூரோக்களுக்கு குறைவான பொருட்கள் மீதான வாட் வரி விதிப்பின்
விதிவிலக்கு முடிவதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், ஒன்லைனில்
ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களின் விலைகள் அதிகரிக்க உள்ளன.