"நாங்கள் ஒன்னும் குற்றவாளிகள் இல்ல"... எங்கள மட்டும் ஏன்?
உலக LGBTQ வாரத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வானவில் திருவிழா சுயமரியாதை பேரணியில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகள் அணிந்து பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர்.
ஜூன் மாதத்தின் முதல் வாரம் உலகம் முழுவதும் LGBTQ சமூகத்துக்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் LGBTQ அடையாளத்தை உணர்த்தும் வகையில் ஆண் பெண் என்று வரையறுக்கப்பட்டு உள்ள ஆடைகள், சிகையலங்காரங்களை புறம்தள்ளி தங்கள் உணர்வுகளுக்கு பிடித்த ஆடைகளை பலர் அணிந்து, அலங்காரம் செய்து வந்தனர்.
வானவில் நிறங்களை கொண்ட LGBTQ கொடியை சுமந்தபடி ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டது வண்ணமயமாக இருந்தது.
பலரும் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற சமத்துவத்துக்காக போராடிய தலைவர்களின் கருத்துக்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி நின்றனர். பாலின சமத்துவம், பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தியும், தங்களையும் சமூகத்தில் வேறுபாடின்றி நடத்தக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.