பிரதமர் இல்லாத பிரித்தானியா: பெரிய நிம்மதி என்று கூறியுள்ள ஒரு தரப்பினர்...
லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் இல்லாத நாடாக ஆகியுள்ளது பிரித்தானியா.
ஆனாலும், பிரதமரின் ராஜினாமா ஒரு தரப்பினருக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், வெறும் 45 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போது பிரித்தானியாவுக்கு பிரதமர் இல்லை. ஆனாலும் கூட, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. சொல்லப்போனால், அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையற்ற தன்மை நிலவும் நிலையிலும், முதலீட்டாளர்கள் பிரதமரின் ராஜினாமா செய்தியால் நிம்மதி அடைந்துள்ளதாக பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்குக் காரணமும் இருக்கிறது. அதாவது, பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் மினி பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
நாணய மதிப்பு வீழ்ச்சியடைவது சாதாரண விடயம் அல்ல. பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரும். ஏனென்றால்,டொலர் அல்லது யூரோவுக்கு எதிரான பவுண்டுன் மதிப்பு குறையுமானால், வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை வாங்குவதற்காக அதிக தொகை செலுத்தவேண்டியிருக்கும்.
அத்துடன், மதிப்புக் குறைந்த பவுண்டு, ஏற்கனவே அதிகரித்துள்ள விலைவாசியை இன்னும் அதிகரிக்கும். அதாவது, மூலப்பொருட்களின் விலை உயர்வை நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட முடிவு செய்தால், அவர்கள் பொருட்களுக்கும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
ஆகவேதான், நாணய மதிப்பை வீழ்ச்சியடையவிட்ட லிஸ் ட்ரஸ்ஸின் ராஜினாமாவால் ஒரு தரப்பினர் நிம்மதியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு நிலையில் மக்கள் இருக்க, அடுத்து பிரதமராக யார் வந்தாலும்,அவரும் நிதி அமைச்சரும் உடனடியாக செயல்பட்டு, இழந்த மக்களின் நம்பிக்கையை மீட்கவேண்டியிருக்கும் என்கிறார்கள் தொழில்துறையினர்.