திடீரென மாயமான பிரதமர் லிஸ் ட்ரஸ்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்..
முக்கிய நிகழ்வின்போது பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நாடாளுமன்றத்திற்கு வராததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
முதுகெலும்பில்லாத பிரதமர் மேசைக்கடியில் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, எங்கே அவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் எழுப்பினார்கள்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது இடத்தைப் பிடிக்க கடும் போட்டி நடந்தது.
முழு அரசியல்வாதியாக, அதைச் செய்வேன் இதைச்செய்வேன் என வாய்ஜாலம் பேசி பிரதமர் பதவியைக் கைப்பற்றிய லிஸ் ட்ரஸ், சொன்னதைச் செய்ய இயலாமல் தடுமாறி வருகிறார்.
அவர் ராஜினாமா செய்யவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியினரே நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தன் பதவியைத் தக்கவைப்பதற்காக நிதி அமைச்சரின் பதவியைப் பறித்து அரசியல் செய்கிறார் அவர்.
இந்நிலையில், எதனால் நிதி அமைச்சரை பதவிநீக்கம் செய்தார் பிரதமர் என்னும் கேள்விக்கு அவர் பதிலளிக்கவேண்டிய அவசர நிலை உருவானது.
REUTERS
ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய லிஸ் ட்ரஸ் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கோபமடைந்தனர்.
நாடாளுமன்ற அவைத்தலைவரான Penny Mordaunt, பிரதமர் ஒரு அவசர வேலையாக சென்றிருப்பதாகவும், அவருக்கு பதில், தான் விளக்கமளிக்க இருப்பதாகவும் கூற, லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Stella Creasy என்பவர், பிரதமரே வந்து பதில் சொன்னாலொழிய, அவர் எங்கோ மேசைக்கடியில் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம், சரியான நேரத்தில், பிரித்தானியா சார்பில் மிகவும் முக்கியமான விடயம் தொடர்பில் முடிவெடுக்கவேண்டிய நேரத்திலா, பிரதமர் வராமல் அவருக்கு பதில் மற்றொருவரை பதில் சொல்ல வைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
SNP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Kirsten Oswald, பிரதமர், பிரதமர் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். ஒரு பிரதமர் தான் உருவாக்கின குழப்பத்திற்கு பதிலளிக்க பயப்படுகிறார். அவர் எங்கே என அவைத்தலைவர் சொல்ல முடியுமா, இன்று அவைக்கு வர அவருக்கு முதுகெலும்பு இல்லையானால், அதற்குப் பிறகு அவர் இங்கே வருவதில் என்ன பயன், அவரது நேரம் முடிந்துவிட்டது, அவர் புறப்படவேண்டும் பின்னர் நடக்கபோவதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றார் அவர்.
லிபரல் டெமாக்ரட் கட்சித் தலைவரான Sir Ed Davey, முந்தைய பிரதமர் மக்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்தார். இப்போதுள்ள பிரதமரோ, பிரித்தானிய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இதற்கிடையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆட்சி கவிழ்க்கப்படவில்லை என்று கூறிய அவைத்தலைவர் பிரதமர் அவைக்கு வராததற்காக
மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.