இளவரசர் ஆண்ட்ரூ மீது வன்கொடுமை குற்றம் சாட்டியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டியவர், சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்களே
விபத்திற்குப் பிறகு தான் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவதாகவும், சிகிச்சைக்காக ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்படவிருந்ததாகவும் வர்ஜீனியா கியூஃப்ரே கூறியுள்ளார்.
41 வயதாகும் வர்ஜீனியா கியூஃப்ரே மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களே அவர் உயிர் வாழக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதையே, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வர்ஜீனியா கியூஃப்ரே பதிவு செய்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் அவர், பாடசாலை பேருந்து ஒன்றுடன் மிக மோசமான விபத்தில் சிக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான அவர், கடைசியாக ஒருமுறை தமது பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார்.
அவர்கள் எனக்கு நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளனர், என்னை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர் என்று தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன்
ஒரு வளைவில் திரும்ப தமது கார் முயற்சிக்கும் வேளையில், மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்த பாடசாலை பேருந்தில் சிக்கினால் காரின் நிலை என்னவாகும் என யோசித்துப் பாருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக தமது பிள்ளைகளை ஒருமுறை பார்த்துவிட்டு நிம்மதியாக இறக்க தாம் தயாராகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் பாம் பீச்சில் உள்ள ரிசார்ட்டில் பணியாற்றும் போதே,
வெறும் 16 வயதேயான வர்ஜீனியா கியூஃப்ரே, கோடீஸ்வரரும் சிறார் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவரால் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டார்.
17 வயதில், லண்டன் உட்பட, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக வர்ஜீனியா கியூஃப்ரே அம்பலப்படுத்தியிருந்தார்.
இளவரசர் ஆண்ட்ரூ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தாலும், 2022ல் சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் தொகையை இழப்பீடாக அளித்து வழக்கை முடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |