இளவரசர் ஆண்ட்ரூ கைது... சாரா ஃபெர்குசன் எங்கே?
பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியாகிய சாரா ஃபெர்குசன் எங்கே என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ கைது...
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய மன்னரான சார்லசின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரை விசாரித்து வருவதாக, தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை கூறியிருந்த நிலையில், இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.
ஆண்ட்ரூ கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிசார், விசாரணையின் ஒரு பகுதியாக இன்று நோர்ஃபோக்கில் 60 வயதுகளில் உள்ள ஒருவரை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளோம்.

மேலும், பெர்க்ஷயர் மற்றும் நோர்ஃபோக்கில் உள்ள முகவரிகளிலும் சோதனைகளை நடத்தியுள்ளோம். தற்போது அந்நபர் போலீஸ் காவலில் உள்ளார். தேசிய வழிகாட்டுதலின்படி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை வெளியிட இயலாது என்று மட்டுமே கூறியுள்ளார்கள்.
என்றாலும், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
சாரா எங்கே?
இந்நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாகிய சாரா ஃபெர்குசன் எங்கே என்னும் கேள்வி எழுந்துள்ளது. ஆண்ட்ரூவும் சாராவும் விவாகரத்து செய்த நிலையிலும், இருவரும் ராஜகுடும்பத்துக்கு சொந்தமான ராயல் லாட்ஜ் என்னும் மாளிகையில் இணைந்தே வாழ்ந்துவந்தனர்.

ஆனால், சமீபத்தில் இரவோடு இரவாக ஆண்ட்ரூ ராயல் லாட்ஜை விட்டு வெளியேறினார். அதற்குப்பின், சாரா, சமீபத்தில் பிரான்சில் தனது நண்பர்களுடன் நேரம் செலவிட்டதாகவும், அதன் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன், கத்தாருக்கு கலை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்காகச் சென்றுள்ள தன் மகளான இளவரசி யூஜீனியுடன் சாரா நேரம் செலவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அவர் எங்கிருந்தாலும், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டுள்ள செய்தி, சாராவுக்கும், தம்பதியரின் பிள்ளைகளான இளவரசிகள் யூஜீனி மற்றும் பீட்ரைஸுக்கும் கலக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |