பட்டங்களை இழந்த இளவரசர் ஆண்ட்ரூ பிரித்தானியாவை விட்டு வெளியேற வாய்ப்பு
பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தையும் இழந்த இளவரசர் ஆண்ட்ரூ, தாமாகவே நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பிருப்பதாக அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் கணித்துள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் மன்னர் மற்றும் விரிவான அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து திசை திருப்புவதாக வெள்ளிக்கிழமை இரவு கூறினார்.
அமெரிக்கரான விவாதத்திற்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான நட்பில் தாம் வருத்தப்படவில்லை என பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஊடக நேர்காணலில் ஆண்ட்ரூ குறிப்பிட்ட 2019 ஆம் வருடம், அரச குடும்பம் சார்பான பொது வாழ்க்கையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் தாயார் இரண்டாம் எலிசபெத் ராணியாரால் இராணுவத்தில் அவருக்கிருந்த பட்டங்கள் மற்றும் HRH அடையாளமும் பறிக்கப்பட்டது. ஆனால் அவரது சமீபத்திய அறிவிப்பில், அவருக்கிருந்த மொத்த அடையாளங்களும் பறிக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ தாமாகவே முன்வந்து தமது பட்டங்கள், பதவிகள் அனைத்தையும் ஒப்படைத்ததாக கூறப்பட்டாலும், மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியோரின் அழுத்தம் இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
இளவரசராகவே
இந்த நிலையிலேயே ஆண்ட்ரூவின் வாழ்க்கை வரலாற்றாசிரியரான Nigel Cawthorne தெரிவிக்கையில், ஆண்ட்ரூவுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி தாமாக நாட்டை விட்டு வெளியேறுதல் மட்டுமே, ஏனென்றால் அரச குடும்பத்திற்கு அவர் ஒரு சுமையாக மாறுகிறார் என்பதை ஆண்ட்ரூ அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினரே, அவரை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். எஞ்சியுள்ள நாட்களை ஒப்பீட்டளவில் அமைதியுடனும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு நட்பு நாட்டைக் கண்டுபிடிப்பதே அவருக்கு இருக்கும் ஒரே வழி.
இதனிடையே, Duke of York பட்டத்தை அவர் இனி பயன்படுத்த முடியாது என்றாலும், அவர் இளவரசராகவே அறியப்படுவார். மேலும், பிரித்தானியாவின் அரசராகும் வரிசையில் எட்டாமிடத்தில் உள்ளார்.
ஆனால், இந்த மாற்றங்கள் எதுவும் ஆண்ட்ரூவின் இரு மகள்களையும் பாதிக்காது என்பதுடன், அவர்கள் இருவரும் பிரித்தானிய இளவரசிகள் பட்டத்துடன் நீடிப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |