பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு புத்தாண்டில் காத்திருக்கும் புதிய தலைவலி
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய சகோதரருமான ஆண்ட்ரூ, பருவம் எய்தாத இளம்பெண் ஒருவருடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு, ராஜகுடும்பத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
தற்போது, மற்றொரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்துகொண்ட விடயம் தொடர்பான வழக்கு ஒன்றின் காரணமாக, புத்தாண்டில் ராஜ குடும்பத்துக்கு புதிய தலைவலி ஒன்று உருவாக உள்ளது.
இளம்பெண்களிடம் அத்துமீறிய இளவரசர்...
சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்து விருந்தினர்களுக்கு இரையாக்கிவந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்.
அப்படி எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்றவர்களில் ஒருவர், இளவரசர் ஆண்ட்ரூ. விருந்தொன்றின்போது, ஆண்ட்ரூ, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மறுத்தாலும், நீதிமன்றத்துக்கு வெளியே, சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து அவரது வாயை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
புதிய சிக்கல்
எப்ஸ்டீன் மற்றும் அவரது காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லால் சீரழிக்கப்பட்டது விர்ஜினியா மட்டுமல்ல, ஏராளம் இளம்பெண்களை அவர்கள் ஏமாற்றி சீரழித்துள்ளார்கள்.
அவ்வகையில், ஜோஹன்னா (Johanna Sjoberg) என்னும் இளம்பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார், இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் வீட்டில் வைத்து, ஜோஹன்னாவை தவறாக தொட்டதாக ஒரு வழக்கு உள்ளது.
இதுவரை விர்ஜினியா வழக்கு மட்டுமே வெளியே தெரிந்த நிலையில், தற்போது, நீதிபதியான Loretta Preska என்பவர், ஜோஹன்னா தொடர்புடைய ஆவணங்களை வெளியிடலாம் என அனுமதியளித்ததன் பேரில், ஜோஹன்னா குறித்த விடயம் வெளிவந்துள்ளது.
14 நாட்களில் ஜோஹன்னா தொடர்புடைய ஆவணங்களை வெளியிடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளதால், புத்தாண்டில் ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரச்சினை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |