ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் நிதியுதவி பெற்ற பிரித்தானிய இளவரசர்: வெளிவரும் பகீர் தகவல்
தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்றதாக அதிரவகைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், பக்கர் பின்லேடனிடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றார் என குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர் இந்த பக்கர் பின்லேடன்.
இளவரசர் சார்லஸ் நன்கொடை பெற்ற விவகாரத்தில் ஒசாமாவின் இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரரான ஷபீக் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், குறித்த தொகையானது பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.
மேலும், பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து பெருந்தொகை நன்கொடையாக பெறுவது அரச குடும்பத்தை சிக்கலில் தள்ளும் என அரண்மனை அதிகாரிகள் தரப்பு எச்சரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதில் உண்மை இல்லை என்றே நம்பப்படுகிறது.
பட்டத்து இளவரசரான சார்லஸ் கடந்த 2013 அக்டோபர் மாதம் லண்டனில் உள்ள கிளாரன்ஸ் இல்லத்தில் 76 வயதான பக்கருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்பானது அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படைகளால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளையின் ஐந்து முக்கியஸ்தர்களின் ஒப்புதலுக்கு பின்னரே, பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டதாகவும், கண்காணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அரசாங்க தரப்பு உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னரே பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளையின் ஐந்து முக்கியஸ்தர்களும் நன்கொடைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.