வெளியே தலை காட்டாதே... தம்பிக்கு உத்தரவிட்டுள்ள பிரித்தானிய இளவரசர்
பிரித்தானிய இளவரசர் சார்லஸ், தன் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவை வெளியே தலைகாட்டவேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எட்டாத பெண்ணுடன் ஒருவருடன் உறவு கொண்டதாக எழுந்த புகார் பிரித்தானிய மக்களையும் ராஜ குடும்பத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பலரை சீரழித்து, பல செல்வந்தர்களுக்கு இரையாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆண்ட்ரூவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, பல பெண்கள் அவர் மீது பாலியல் புகார் அளித்தார்கள்.
கடந்த மாதம் ஆண்ட்ரூவை அழைத்த மகாராணியார், அவரை ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது இளவரசர் சார்லஸ் மன்னராவது குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இளவரசர் சார்லஸ் ஆண்ட்ரூவை விண்ட்சர் மாளிகையை விட்டு, சொல்லப்போனால், நகரத்தை விட்டே வெளியேற உத்தரவிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமும் விண்ட்சர் மாளிகைக்கு காரில் வரும் ஆண்ட்ரூ, மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கையசைத்தபடி வரும் புகைப்படங்கள் வெளியாவதை சார்லஸ் விரும்பவில்லை என்றும், யார் கண்ணிலும் படாமல் அமைதியாக இருக்குமாறு அவர் ஆண்ட்ரூவை எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆக, இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது, இளவரசர் ஆண்ட்ரூ விண்ட்சர் மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ தன் மனைவியாகிய ஃபெர்கியை விவாகரத்து செய்துவிட்டாலும், இருவருமாக விண்ட்சர் மாளிகையில்தான் தற்போது தங்கியிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் இருவருமே விண்ட்சர் மாளிகையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.