மீண்டும் கொரோனா பாதிப்புக்கு இலக்கான இளவரசர் சார்லஸ்
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மீண்டும் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது. இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து தமது இல்லத்திலேயே அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மட்டுமின்றி திட்டமிடப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அரண்மனையில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், இளவரசர் சார்லஸ் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 வயதான இளவரசர் சார்லஸ் கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார். கொரோனா பாதிப்பை மிக எளிதாகவே எடுத்துக் கொண்டதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
தற்போது ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இளவரசர் சார்லஸ் திட்டமிட்டிருந்த நிலையில், குறித்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு பின்னர் கமிலா பிரித்தானியாவின் ராணியாக பொறுப்பேற்பார் என சனிக்கிழமை ராணியார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.