போதைமருந்துக்கு அடிமையானேன்: உடைத்து பேசிய இளவரசர் ஹரி
தாயார் டயானாவின் இழப்பை தாங்க முடியாமல் மனக்குழப்பத்திற்கு இலக்கானேன் என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து வெளியேறி, மனைவியுடன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இளவரசர் ஹரி, தொடர்ந்து தமது குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதுபோன்று தமது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் அரச குடும்பத்து உறுப்பினர்களை இதுவரை அறிந்திராத பிரித்தானிய மக்களில் பெரும்பாலானவர்கள், மேகன் மெர்க்கல் மீது குற்றச்சாட்டை முன்வைத்தும் வருகின்றனர்.
அதற்கு முதன்மை காரணமாக மேகன் மெர்க்கல் ஒரு கலப்பினத்தவர் என்பதாலையே, அவர் மீது மக்கள் கோபம் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தமது தாயார் டயான ஒரு வெள்ளை இனத்தவர் அல்லாத நபரை விரும்பியதாலையே தொடர்ந்து வேட்டையாடப்பட்டார் என்றும் ஹரி உடைத்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், இளவரசர் ஹரி தமது தாயாரின் மறைவுக்கு பின்னர் தமது தந்தையின் வளர்ப்பு குறித்து கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார்.
மட்டுமின்றி, தமது தாயார் மறைவுக்கு பிறகு அதில் இருந்து மீளவோ, துக்கம் அனுசரிக்கவோ போதுமான அவகாசம் தரப்படவில்லை என்றே ஹரி கூறியுள்ளார்.
அதனாலையே, ஒருகட்டத்தில் தாம் போதைமருந்துக்கும் மதுவுக்கும் அடிமையாக நேர்ந்தது என ஹரி குறிப்பிட்டுள்ளார்.
தாயாரின் மறைவு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள தாம் மது அருந்தவும் போதைமருந்து எடுத்துக்கொள்ளவும் செய்ததாக கூறிய ஹரி, அப்போதேனும் அந்த துக்கத்தில் இருந்து மீள முடியுமா என்பதையே கருத்தில் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஹரியின் 17 வயதில் ஒருமுறை கஞ்சா புகைப்பதை இளவரசர் சார்லஸ் கையும் களவுமாக பிடிக்க, அதன் பிறகு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹரி பலமுறை கஞ்சா புகைத்தது கண்டறியப்பட்டாலும், அவர் அதற்கு அடிமையல்ல என்பதை செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை பின்னர் உறுதிப்படுத்தியது.