ராணியாரிடம் திட்டவட்டமாக தெரிவித்த இளவரசர் ஹரி- மேகன் தம்பதி: வெளியான தகவல்
பிரித்தானிய ராணியாரின் பவள விழா கொண்டாட்டத்தின் போது பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் காட்சியளிக்க விரும்பவில்லை என்று இளவரசர் ஹரி மற்றும் மேகன் தமபதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறாக ராணியாரிடம் முக்கிய கோரிக்கையாக ஜூன் 3ம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் நன்றி செலுத்தும் சேவையின்போது கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் பவள விழா கொண்டாட்டங்களின்போது தங்கள் 2 பிள்ளைகளுடன் நாடு திரும்ப இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், விழாவின் ஒருபகுதியாக பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் காட்சியளிப்போர் பட்டியலில் ஹரி- மேகன் தம்பதி மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறியே, ஹரி- மேகன் தம்பதி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோருக்கு வாய்ப்பளிக்கவில்லை என அரண்மனை வட்டாரங்கள் விளக்கமளித்தன.
இவர்கள் மூவர் மட்டுமின்றி, ராணியாரின் குடும்பத்தில் மொத்தம் 30 பேர்களுக்கு பால்கணியில் காட்சியளிக்கும் வாய்ப்பை ராணியார் வழங்கவில்லை. உண்மையில், ஹரி- மேகன் தம்பதியை ராணியார் விலக்கவில்லை எனவும், அவர்களே ராணியாரிடம் முன்னரே கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் தமது பாட்டியாரிடம் இளவரசர் ஹரி முன்னரே கலந்தாலோசித்து, அவர் ஒப்புதலுடனே அடுத்தகட்ட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரச குடும்பத்து பட்டங்களை துறந்த பின்னர், குடும்பத்தினருடன் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் காட்சியளிப்பது என்பது பொருத்தமற்ற செயல் என தாம் கருதுவதாக ஹரி ராணியாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பதிலுக்கு, ஜூன் 3ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளனர்.