இது மட்டும் நடந்துவிட்டால் இளவரசர் ஹரி பிரித்தானியாவுக்கே திரும்பிவிடுவார்... வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்
இளவரசி டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வந்திருந்த இளவரசர் ஹரி அமெரிக்கா திரும்பிவிட்டார்.
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், ஓபராவுடனான பேட்டியில் தாங்கள் எதனால் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினோம் என்பது குறித்து தெரிவித்த விடயங்கள் ஹரிக்கும் அவரது அண்ணனான வில்லியமுக்கும் இடையிலான உறவில் ஒரு பிளவை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தங்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளை புறம் தள்ளி, தங்கள் தாயின் சிலை திறப்பு விழாவை சிறப்பிக்க வில்லியம், ஹரி இருவருமே விருப்பம்கொண்டிருந்தார்கள்.
ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl கூறும்போது, டயானா சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது, தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய, ஹரி, வில்லியம் இருவருமே பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள் என்கிறார்.
அத்துடன், இளவரசர் பிலிப்புடைய இறுதிச்சடங்கின்போது இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், டயானா சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது அவர்கள் இருவரும் மிகவும் ரிலாக்ஸாக பழகிக்கொண்டதாக தெரிவிக்கிறார் அவர்.
சகோதரர்கள் இருவரும் மட்டும் ஒப்புரவாகிவிட்டார்களானால், மீண்டும் ஹரியும் மேகனும் பிரித்தானியாவுக்கே திரும்ப வாய்ப்புள்ளது என்று கூட ஒரு கருத்து நிலவுகிறது.
டயானா சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு திரும்பிவந்து தன் அண்ணனை ஹரி சந்தித்திருக்கிறார் என்றால், எதற்காக இவற்றையெல்லாம் இழந்தோம் என தன்னைத்தான் கேட்டுக்கொள்ளும் ஒரு நிலையும் ஹரிக்கு உருவாக வாய்ப்புள்ளது என்கிறார் மற்றொரு ராஜ குடும்ப எழுத்தாளர்.
இன்னொரு விடயம் என்னவென்றால், ஹரி பிரித்தானியாவுக்கு வந்திருந்தபோது, தனது பழைய நண்பர்களுடன் உணவருந்த திட்டமிட்டிருந்தார் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. மேகனை திருமணம் செய்ததால் இழந்துபோன பழைய வாழ்க்கையுடன் மீண்டும் இணையும் அவரது விருப்பதை அது காட்டுகிறது என்கிறார் ஒருவர்.
ஒரு பிரச்சினைதான் பெரிதாக இடிக்கிறது... அது ஹரி பிரித்தானியா வருவதற்கு மேகனை சம்மதிக்க செய்வதுதான்! ஏனென்றால், செத்துவிடலாமா என்று எண்ணும் அளவுக்கு தங்களை ராஜ குடும்பத்தினர் வேதனைப்படுத்தினார்கள் என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறிய மேகன், மீண்டும் பிரித்தானியாவுக்கு வரவேண்டுமானால், அவர் பெரிய அளவில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
இன்னொரு பக்கம், மேகனை சம்மதிக்கவைப்பதுடன் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஏனென்றால், மேகன் இருக்கும் வரை சகோதரர்களுக்கிடையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே ஒரு கட்டத்தில் செய்திகள் வெளியாகியிருந்ததால், சமரசத்தை நோக்கி பெரியதாக ஒரு அடி எடுத்துவைப்பதற்கு முன் ஏராளமான விடயங்களை சரி செய்யவேண்டியிருக்கும் என்பதையும் மறுக்கமுடியாது!