இளவரசர் ஹரிக்கு பெரும் பின்னடைவு., பொலிஸ் பாதுகாப்பு வழக்கில் தோல்வி
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழக்கில் நீதிமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அரச குடும்பத்தை விட்டு விலகி, தனது மனைவி மேகன் மற்றும் இரு பிள்ளைகளுடன் கலிபோர்னியாவில் வாழும் இளவரசர் ஹரி, தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் மீண்டும் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளார்.
2020-இல் உள்துறை அமைச்சகம், ஹரிக்கு பிரித்தானியாவில் இருக்கும்போது தானாகவே பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது.
இந்த முடிவை எதிர்த்து ஹரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் கடந்த வருடம், லண்டன் உயர் நீதிமன்றம் இந்த முடிவை சட்டபூர்வமானதாக அறிவித்து ஹரியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இப்போது மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளும் இந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். ஹரியின் பாதுகாப்பு தொடர்பான கவலைக்குரிய உணர்வுகள் உரிய சட்ட அடிப்படையாகக் கருதப்பட முடியாது என்று நீதிபதி ஜெஃப்ரி வாஸ் தெரிவித்துள்ளார்.
ஹரியின் வழக்கறிஞர்கள், அவரை ‘அல்காய்தா’ அமைப்பினர் கொலை செய்ய அழைப்பு விடுத்திருப்பதையும், 2023-ல் நியூயார்க் நகரில் பத்திரிகையாளர் துரத்தலில் சிக்கிய சம்பவத்தையும் முக்கியமாகக் குறிப்பிட்டனர்.
அதேவேளை, அரசின் சட்டத்துறை, ஹரிக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு மதிப்பீட்டு அடிப்படையில் சிறந்ததாக இருக்கின்றன எனக் கூறியது.
இந்த தீர்ப்பு, இளவரசர் ஹரியின் பாதுகாப்பு தொடர்பான நீண்ட போராட்டத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |