இளவரசர் ஹரி மேகனின் பட்டங்கள் பறிக்கப்படவேண்டும்... பெரும்பான்மை பிரித்தானியர்கள் கருத்து
பிரித்தானிய இளவரசர் ஹரி தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய விடயங்களை பேசி வரும் நிலையில், ஹரி மற்றும் மேகனுடைய பட்டங்கள் பறிக்கப்படவேண்டும் என பெரும்பாலான பிரித்தானியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஐந்து பிரித்தானியர்களில் மூன்று பேர், ஹரி மேகனிடமிருந்து Duke and Duchess of Sussex என்னும் பட்டங்களை பறிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஐந்தில் ஒருவர் அவர்கள் பட்டங்களை வைத்துக்கொள்ளட்டும், ஆனால், அவற்றை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார். மேன்மை தங்கிய இளவரசர், இளவரசி (His or Her Royal Highness) என்னும் பட்டங்களை ஹரியும் மேகனும் பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே பிரித்தானிய மகாராணியார் ஹரி மேகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், ஹரி the Duke of Sussex என்ற பட்டத்தையும், மேகன் the Duchess of Sussex என்ற பட்டத்தையும் வர்த்தக ரீதியாக பயன்படுத்திவருகிறார்கள். ஆகவே, மகாராணியார் திருமணப்பரிசாக ஹரி மேகனுக்குக் கொடுத்த அந்த பட்டங்களை முழுமையாகப் பறிக்கவேண்டும் என்பது தொடர்பான புதிய விவாதங்கள் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளன.
ஆனால், ஏற்கனவே ஹரியின் தாய் டயானா தன் விருப்பப்படி தன் பட்டங்களை விட்டுவிட்டாலும், மக்கள் அவரது பட்டங்கள் பறிபோனதற்காக இன்றும் ராஜ குடும்பத்தினரை குற்றம் சாட்டி வரும் நிலையில், அதே போன்ற ஒரு குற்றச்சாட்டு டயானாவின் மகனான ஹரியின் மூலமாகவும் வந்துவிடக்கூடாது என்பதில் மகாராணியாரும், மூத்த அரண்மனை அலுவலர்களும் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் 4,500 வயது வந்த பிரித்தானியர்களிடம் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டபோது, வெறும் 17 சதவிகிதத்தினர் மட்டுமே ஹரியும் மேகனும் தங்கள் பட்டங்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.