மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு இளவரசர் ஹரி, மேகன் அழைப்பு! வெளியான தகவல்
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் இருவரும் பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோர் மே மாதம் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர், ஆனால் கலந்து கொள்வதா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்து வரும் உள் பதட்டங்களுக்கு மத்தியில், 2020-ல் பிரிட்டிஷ் முடியாட்சியை விட்டு வெளியேறிய கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட தம்பதியினர், சமீபத்தில் முடிசூட்டு விழா தொடர்பாக பிரித்தானிய மன்னரின் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் கடிதங்களைப் பெற்றதாக, அவர்களுக்கான செய்தித் தொடர்பாளர் சண்டே டைம்ஸிடம் தெரிவித்தார்.
Zuma Press
ஆனால், அவர்கள் இருவரும் விழாவில் கலந்து கொள்வார்களா என்பது குறித்த உடனடி முடிவு இந்த நேரத்தில் வெளியிடப்பட மாட்டாது, என்று அவர் மேலும் கூறினார்.
அதேசமயம், இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
38 வயதான ஹரி தனது தந்தை, சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து பிரிந்து, நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம், சமீபத்தில் பிரபலமான 'Spare' புத்தகம் மற்றும் பல நேர்காணல்களில் அவர்களது உறவுகளில் முறிவு ஏற்பட்டுள்ளதை பல வகையில் அம்பலப்படுத்திய பிறகு, இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் அரச குடும்பத்தின் வின்ட்சர் எஸ்டேட்டில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து ஹரி-மேகன் தம்பதி வெளியேற்றப்படுகிறார்கள் என்ற செய்து வெளிவந்தது. அதனடிப்படையில், இந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து அவர்களுக்கு பிரித்தானிய தளம் இல்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.