அமெரிக்காவில் இருந்து வெளியேறி... ஐரோப்பிய நாடொன்றில் குடியேறும் ஹரி - மேகன் தம்பதி
பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தமபதி அமெரிக்காவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதுடன், ஐரோப்பிய நாடொன்றில் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரும்பியது போல் அமையவில்லை
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சொந்தமான Frogmore மாளிகையில் இருந்து ஹரி - மேகன் தம்பதி வெளியேற்றப்பட்டதன் பின்னர், குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறியிருந்தனர்.
ஆனால் அமெரிக்க வாழ்க்கை இளவரசர் ஹரிக்கு விரும்பியது போல் அமையவில்லை என்றே கூறப்படுகிறது. இதனையடுத்து இளவரசி யூஜெனி மற்றும் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்குடன் இணைந்து ஐரோப்பாவில் குடியேறும் திட்டத்துடன் வீடு தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இளவரசி யூஜெனி மற்றும் அவரது கணவருக்கு லிஸ்பனின் தெற்கே Melides பகுதியில் சொந்தமாக குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஹரி - மேகன் தம்பதி போர்த்துகல் நாட்டில் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பரிசாக வழங்கிய மாளிகை
இதனால் ஹரி - மேகன் தம்பதிக்கு கோல்டன் விசாவும் வழங்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் Schengen பகுதியிலும் ஹரி - மேகன் தம்பதியால் சிக்கலின்றி பயணப்பட முடியும்.
உண்மையில் Frogmore மாளிகையானது காலமான எலிசபெத் ராணியாரால் ஹரி - மேகன் தம்பதிக்கு திருமணப் பரிசாக 2018ல் வழங்கப்பட்டது. ஆனால் ஹரி - மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற முடிவு செய்த நிலையில், 2020ல் இளவரசி யூஜெனிக்கு Frogmore மாளிகை குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த நிலையில், ராணியார் பரிசாக வழங்கிய மாளிகையை, திரும்ப ஒப்படைக்குமாறு ஹரி - மேகன் தம்பதிக்கு சார்லஸ் மன்னர் உத்தரவிட்டார். இதனையடுத்து, இளவரசர் ஹரி எப்போதெல்லாம் லண்டன் திரும்பினாலும், ஹொட்டலில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |