பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதலுக்காக செலவிடப்பட்ட கனேடிய மக்களின் வரிப்பணம்: வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரிக்காக, கனேடிய மக்களின் வரிப்பணத்தில் பெருந்தொகை ஒன்று செலவிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரியையும் அவரது குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக 334,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
கனேடிய ஊடகம் ஒன்று, கனேடிய பொலிஸ் அமைப்பிடமிருந்து, தகவலறியும் சட்டத்தின் அடிப்படையில் பெற்றுள்ள தகவலின்படி, 2017 ஏப்ரல் 1க்கும் 2018 மார்ச் 31க்கும் இடையில் ஹரி கனடாவுக்கு வந்தபோதெல்லாம் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் 182,430 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது,
2020 ஜனவரியில், இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் கனடாவில் வாழ்வதென முடிவு செய்து, பிரித்தானிய ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறினர். அந்த காலகட்டத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது மகன் ஆகியோரின் பாதுகாப்புக்காக மாதம் ஒன்றிற்கு சுமார் 33,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹரி, திருமணத்திற்கு முன்பே, மேகனை சந்திக்க கனடாவுக்கு வந்திருக்கிறார். ஆம், ஒரு அமெரிக்க நடிகையாக இருந்த மேகன் சிறிது காலம் கனடாவில் வாழ்ந்துள்ளார்.
அப்போது, அவரை சந்திப்பதற்காக ஹரி கனடா வந்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடமாடும் காட்சிகள் அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அப்படி எத்தனை முறை ஹரி மேகனை சந்திக்க கனடாவுக்கு வந்தாரோ தெரியாது. ஆனால், அப்படி அவர் மேகனை காதலிக்கும்போது, அவரைக் காண வந்தபோதெல்லாம் அவருடைய பாதுகாப்புக்காக கனேடிய மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் உண்மையில் மக்களுக்கு வருத்தமளிக்கும் தகவல்தான்!