மீண்டும் பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி... இம்முறை மேகனுடன்?
இளவரசி டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக அமெரிக்காவிலிருந்து இளவரசர் ஹரி பிரித்தானியா வந்திருந்த நிலையில், குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
ஆகவே, மீண்டும் அவர் டயானாவை கௌரவிப்பதற்காக நடத்தப்படும் மற்றொரு நிகழ்ச்சிக்காக செப்டம்பரில் பிரித்தானியா வர இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், இம்முறை ஹரியுடன் அவரது மனைவி மேகனும் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1 அன்று, மக்களின் இளவரசி என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளையொட்டி, கென்சிங்டன் மாளிகையில் டயானாவுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் ஒன்றில் அவரது உருவச் சிலையை இளவரசர் வில்லியமும், ஹரியும் திறந்துவைத்தனர்.
பிரம்மாண்டமாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வில்லியம், ஹரி மற்றும் இளவரசி டயானாவின் உறவினர்களுடன் எளிமையாக நடந்து முடிந்துவிட்டது.
ஆகவே, செப்டம்பரில் இளவரசி டயானாவை கௌரவிக்கும் வகையில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த ராஜ குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
டயானா சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது ஹரி வில்லியமுக்கு இடையே பெரிய அளவில் பேச்சு வார்த்தைகள் எதுவும் நடக்காத நிலையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் அந்த நிகழ்ச்சி சகோதர்களுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.