இளவரசர் ஹரி போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நீதிமன்றம் முக்கிய முடிவு
பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது சுயசரிதைப் புத்தகத்தில் தான் கடந்த காலத்தில் போதைப்பொருட்களை பரிசோதித்துப் பார்த்ததாக தெரிவித்திருந்தார்.
ஹரியின் சுயசரிதைப் புத்தகத்தால் உருவான பிரச்சினை
ஹரியும் அவரது மனைவி மேகனும், அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும்.
அப்படியிருக்கும் நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் ஹரி, விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.
நீதிமன்றம் சென்ற அமைப்பு
ஆக, ஹரி விசா தொடர்பான ஆவணங்களில் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.
ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என்னும் நிலையும் உருவானது.
நீதிமன்றம் முக்கிய முடிவு
இந்த பிரச்சினையில், Carl Nichols என்னும் நீதிபதி, இளவரசர் ஹரியின் விசா தொடர்பான ஆவணங்களை மீளாய்வு செய்ய கோரியிருந்தார்.
ஐந்து மாதங்கள் ஹரியின் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்துள்ளார்.
அதாவது, ஹரியின் விசா தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படாது என அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இதற்கிடையில், ஆவணங்களை வெளியிடுவது ஹரியின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசு சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |