பாதுகாக்க முடியாது... இளவரசர் ஹரி வெளியேற்றப்படுவார்: மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
ஜோ பைடன் போன்று இளவரசர் ஹரியை பாதுகாக்க முடியாது என்றும், அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மீண்டும் தெரிவு செய்யப்பட்டால்
வாஷிங்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட CPAC மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், இளவரசர் ஹரியை வெளியேற்ற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி தனது போதைப்பொருள் பாவனையை தவறாகக் குறிப்பிட்டாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்தில் ஆஜரான 24 மணி நேரத்தில், டொனால்டு ட்ரம்ப் இந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஹரி தமது போதைப்பொருள் பாவனை தொடர்பில் தனது Spare என்ற நினைவுக்குறிப்பில் விரிவாக விவாதித்திருந்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் தற்போது Heritage அறக்கட்டளை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஹரி மீது அதிக கருணை
இந்த நிலையில் தான், ஹரியைப் பாதுகாப்பதற்காக ஹாரியின் குடியேற்ற விண்ணப்பத்தின் தனியுரிமையைப் பேணுவதாக குறிப்பிட்டு ஜோ பைடன் நிர்வாகம் மீது டிரம்ப் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய ராணியாரை ஏமாற்றியவர், அவரை பாதுகாக்க தமக்கு விருப்பமில்லை என்றும் டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரண்மனை ஹரி மீது அதிக கருணை காட்டியுள்ளதாகவும் ஆனால் ஹரியின் நடவடிக்கை நேரெதிராக இருந்தது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |