பள்ளியில் படிக்கும்போதே கேட் கண்களில் பட்ட இளவரசர் வில்லியம்... ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரித்தானிய இளவரசர் வில்லியம் கல்லூரியில் படிக்கும்போது, ஒருநாள், உள்ளாடைகள் பளிச்சென தெரியும் வகையில் மெல்லிய கருப்பு நிற உடை அணிந்து கேட் catwalk செய்ய, அவரது அழகில் மயங்கிவிட்டார் வில்லியம், அப்படித்தான் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பள்ளிப்பருவத்திலேயே வில்லியம், கேட் கண்களில் சிக்கியிருக்கிறார் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வில்லியமும் கேட்டும் காதலிக்கத் தொடங்குவதற்கு 10 ஆண்டுகள் முன்பு, கேட் படித்த St Andrew's பள்ளிக்கு ஹாக்கி விளையாட்டுப் போட்டி ஒன்றிற்காக வந்திருந்தாராம் வில்லியம். அப்போதே அவர் மீது கேட் கண் வைத்திருந்தார் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளரான Katie Nicholl.
பெரும்பாலும் ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிராத கேட்டை, ஒரு குறிப்பிட்ட இளைஞர் கவர்ந்ததாக தெரிவிக்கிறார் Ms Nicholl. அது வேறு யாருமல்ல, தான் படித்த பள்ளிக்கு, ஹாக்கி விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த இளவரசர் வில்லியமேதான்!
கேட்டைப் போலவே, வில்லியமும் விளையாட்டுக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். குறிப்பாக, அந்த ஆண்டில் ஹாக்கி மற்றும் ரக்பி விளையாட்டு வீரர்களில் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார்.
ஆக, வில்லியமுடைய வருகை கேட் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், நேரடியாக இது குறித்து கேட் எதுவும் கூறவில்லை என்றாலும், தான் St Andrew's பள்ளியில் படித்த நாட்கள் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்திருக்கிறார் கேட்.
ஏதோ திரைப்படத்தில் பார்த்த விடயம் போல் இருக்கிறது!