இளவரசர் வில்லியம் ஜேர்மனியில், கேட் விம்பிள்டனில்: இளவரசர் லூயிஸைக் காணோம்
பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம் ஜேர்மனியில் தன் மகன் ஜார்ஜுடன் கால்பந்தாட்டப் போட்டியைக் காணச் சென்றிருந்தார்.
இளவரசி கேட், தன் மகள் சார்லட்டுடன் விம்பிள்டனில் டென்னிஸ் போட்டியில் வென்ற விளையாட்டு வீரருக்கு பரிசளிக்கச் சென்றிருந்தார். ஆனால், குட்டி இளவரசரான லூயிஸை மட்டும் காணவில்லை!
ஜேர்மனியில் இளவரசர் வில்லியம்
Euros 2024 இறுதிப் போட்டியைக் காண்பதற்காக பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மகனான ஜார்ஜும் ஜேர்மனிக்குச் சென்றதைக் காட்டும் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து முதல் கோல் அடிக்க, தந்தையும் மகனும் உற்சாகக் கூச்சலிடும் காட்சிகளும், இறுதியில் ஸ்பெயின் இரண்டாவது கோல் அடித்ததால் இங்கிலாந்து வெற்றிக்கோப்பையை பறிகொடுக்க, வில்லியமும் ஜார்ஜும் அதிர்ச்சியில் உறைந்த காட்சிகளும், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் இளவரசர்களுடன் காணப்படும் காட்சிகளும் ஊடகங்களிலும் இணையத்திலும் அதிக அளவில் வெளியாகியுள்ளன.
விம்பிள்டனில் இளவரசி கேட்
இதற்கிடையில், விம்பிள்டனில் நடைபெற்ற ஆண்கள் இறுதி டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்ட இளவரசி கேட், வெற்றி பெற்ற ஸ்பெயின் நாட்டு வீரரான Carlos Alcarazக்கு பரிசு வழங்கினார். அவருடன் அவரது மகளான சார்லட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால், வில்லியம், கேட் தம்பதியரின் மகனான குட்டி இளவரசர் லூயிஸை மட்டும் எங்கும் பார்க்கமுடியவில்லை.
அதாவது, ஆறு வயதாகும் குட்டி இளவரசர் லூயிஸ் தூங்கும் நேரத்தில் கால்பந்து போட்டிகள் நடந்ததால், அவரை அவரது தந்தையான வில்லியம் போட்டியைக் காண அழைத்துச் செல்லவில்லையாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |