முதன்முறையாக... இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகள் சந்தித்த அதிர்ச்சி
இளவரசர் வில்லியம் தன் மனைவி கேட் மற்றும் பிள்ளைகளுடன் வெளியே செல்லும்போது, பொதுவாக மக்களுடைய உற்சாக வரவேற்பைத்தான் அவர்கள் எதிர்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், முதன்முறையாக இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகள், ராஜ குடும்பத்துக்கு மக்களில் ஒரு பிரிவினரிடையே இருக்கும் எதிர்ப்பைக் காண நேர்ந்தது!
குட்டி இளவரசர்கள் சந்தித்த அதிர்ச்சி
பொதுவாக, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி, பக்கிங்காம் அரண்மனையிலிருந்து மக்களை நோக்கி கையசைக்கும்போதும் சரி, ராஜ குடும்பத்தினரை மக்கள் உற்சாகப்படுத்துவதைத்தான் பார்த்திருப்பார்கள் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான குட்டி இளவரசர்கள் ஜார்ஜும், சார்லட்டும் லூயிஸும்.

குறும்புக்கார இளவரசர் லூயிஸ் செய்யும் சேட்டைகளைப் பார்த்து கூட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்தான் செய்வார்கள்.
ஆனால், முதன்முறையாக, தங்களைப் பார்த்து ஒரு கூட்டம் மக்கள் ஊளையிடுவதைக் கண்டு திகைத்துப்போனார்கள் குட்டி இளவரசர்கள்.
ஆம், லண்டனில் நடைபெற்ற மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டமான Trooping the Colour என்னும் நிகழ்ச்சிக்கான அணிவகுப்பைக் காண்பதற்காக ராஜ குடும்பத்தினர் குதிரை வண்டிகளில் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம்போலவே, சாலையின் இரண்டு ஓரங்களிலும் கூடியிருந்த மக்கள் ராஜ குடும்பத்தினரை நோக்கி உற்சாகக் குரல் எழுப்ப, ராஜ குடும்ப உறுப்பினர்களும் மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒரு கூட்டம் மக்கள், மன்னராட்சி ஒழிக எனக் கூறும் பதாகைகளுடனும், இளவரசர் ஆண்ட்ரூ பெண் ஒருவர் மீது நாலு காலில் நிற்கும் படம் மற்றும் ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நிற்கும் படங்களையும் கையில் பிடித்தபடி நின்றுகொண்டு மன்னராட்சிக்கு எதிரான குரல் எழுப்பினார்கள்.

அவர்கள், மன்னராட்சிக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ரீபப்ளிக் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்!
இதுவரை உற்சாக வரவேற்பையே கண்டிருந்த குட்டி இளவரசர்கள் முதன்முறையாக எதிர்ப்பைக் கண்டு திகைத்துப்போய் அமர்ந்திருக்க, தன் பிள்ளைகள் அதிர்ச்சியடைந்ததைக் கண்ட இளவரசி கேட்டின் முகமும் மாறியது.

எப்போதும் புன்னைகையுடனே காணப்படும் இளவரசி கேட், தன் பிள்ளைகள் அதிர்ச்சியடைந்ததால், மன்னராட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை முறைத்துப் பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குட்டி இளவரசர்களையும் பார்த்து ரீபப்ளிக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குரல் எழுப்பியதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |