தனது தம்பியிடம் தனிப்பட்ட முறையில் பேசியவை கூட மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் இளவரசர் வில்லியம் கவலை
தனது தம்பியிடம் தனிப்பட்ட முறையில் பேசியவை கூட மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் இளவரசர் வில்லியம் கவலையடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டிதான், தாங்கள் ராஜ குடும்பத்தைக் குறித்து பேசும் கடைசி முறையாக இருக்கும் என ஹரியும் மேகனும் வலியுறுத்தியிருந்தார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு ஹரியுடன் இளவரசர் வில்லியமும், அவர்களது தந்தையான சார்லசும் பேசிய விடயங்கள் மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளதால் ராஜ குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
நேற்று முன் தினம், CBS தொலைக்காட்சி தொகுப்பாளினியும், மேகனின் தோழியுமான Gayle King என்பவர், இளவரசர் ஹரியுடன் அவரது குடும்பத்தினர் பேசிய விடயம் குறித்த தகவல் ஒன்றை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஹரி, இளவரசர் வில்லியம் மற்றும் தனது தந்தையுடன் பேசியதாகவும், அந்த பேச்சு வார்த்தை பயனளிக்கும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் Gayle King.
நேற்று மீண்டும் ராஜ குடும்பம் குறித்த மற்றொரு தகவலையும் அவர் வெளியிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் ஒருவேளை இறந்துபோனால், தங்கள் பேட்டியை தள்ளிவைக்கவேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஹரி மேகன் தம்பதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆக, தொடர்ந்து ராஜ குடும்பத்தைக் குறித்த விடயங்கள் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வண்ணம் உள்ளன.
எனவே, இனி தன் தம்பி ஹரியிடம் என்ன பேசினாலும், அது அமெரிக்க தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக வாய்ப்புள்ளது என்பதால், உறவுகளை சீர்ப்படுத்தும் முயற்சியாக அடுத்த அடி எடுத்துவைப்பது கடினம் என வில்லியம் கவலையடைந்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.


