மூன்றாவது பெண் என அழைக்கப்பட்டாலும் முதல் பெண்ணாக மாற இருக்கும் இளவரசி கமீலா: விதியின் விளையாட்டு
பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில், எங்கள் திருமணத்தில் மூன்றாவதாக ஒரு பெண் இருக்கிறார் என்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார் இளவரசி டயானா.
அந்த பெண் கமீலா பார்க்கர்!
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்கப்படும் பிரித்தானியா போன்ற நாடுகளிலும், அதைச் சரியாக செய்யாமல், தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, காதலை வெளியில் சொல்லாமல் மறைத்து, பிறகு தன் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட, அந்த நேரம் தன் காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட, அதற்குப் பிறகு அவளிடம் காதலை வெளிப்படுத்த, அதனால் இரண்டு குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட, இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் நிறைந்தது, இளவரசர் சார்லஸின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை.
23 ஆண்டுகளுக்கு முன், பாரீஸில் கார் விபத்தொன்றில் இளவரசி டயானா கொல்லப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு, இளவரசர் சார்லஸ் மகாராணியாரைப் பார்க்கச் சென்றாராம்.
மீண்டும் கமீலாவுடன் இணைந்து வாழ அனுமதியும் ஆதரவும் அவர் கோர, மகாராணியாரோ, நான் அந்த கெட்ட பெண்ணைக் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம்.
அன்று மகாராணியாரால் கெட்ட பெண் என்று அழைக்கப்பட்ட அதே கமீலா, இன்று ராஜ குடும்பத்தில் ஒரு முக்கியமான நபராக உருவெடுத்திருக்கிறார்.
மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் மரணமடைந்தபோது, மகாராணியார் மீது கமீலா காட்டிய பரிவும் பாசமும் மகாராணியாருக்கு மிகவும் அவசியமாக இருந்திருக்கிறது.
அத்துடன், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, கேட்டுக்கும் மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார் கமீலா.
அத்துடன், ஒரு காலத்தில் டயானா மீதான அன்பால் மக்கள் கமீலா மீது காட்டிய வெறுப்பும் இன்று நீங்கி, இன்று பொதுமக்களும் அவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது, கமீலா, ராணி என அழைக்கப்படுவார் என்ற செய்தி வேறு கிடைத்திருக்கிறது. அதற்காக கமீலா நீண்ட காலம் பொறுமையுடன் உழைத்ததை மறுக்கமுடியாது.
அத்துடன், கமீலாவுடன் தன் மகன் சார்லசின் வாழ்க்கை அமைதியாக செல்வதையும் கவனிக்க மகாராணியார் தவறவில்லை. கமீலா தன் மகனுக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார், நாளை அவர் மன்னராகும்போது கமீலா அவருக்கு உற்ற துணையாக இருப்பார் என்பதை உணர்ந்த மகாராணியாரும் அவரை மனதார ஏற்றுக்கொண்டு விட்டார்.
ஆக, முதலில் வெறுக்கப்பட்டாலும் இன்று மகாராணியார் மனதிலும், மக்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்ட கமீலாவை நினைக்கும் அதே நேரத்தில், மன்னர் குடும்பத்தில் பிறந்தவரை மணந்தும், அனைத்தையும் இழந்துபோன மேகனை நினைத்துப் பார்த்தால், அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை.