இனி இந்த நாடுகளில் இருந்து திரும்பினால் சட்டவிரோதம்... 5 ஆண்டுகள் வரை சிறை: கடுமையாக்கிய அவுஸ்திரேலியா
இந்தியா உள்ளிட்ட அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா திரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவுஸ்திரேலியா கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.
அதன் ஒருபகுதியாக இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா திரும்பினால், 5 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக அவுஸ்திரேலியா திரும்பிய இருவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவுஸ்திரேலியா நிர்வாகமும் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மட்டுமின்றி, வரலாற்றில் முதல்முறையாக, அவுஸ்திரேலிய அரசாங்கம் பிற நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதை சட்டவிரோதமாக காண முடிவு செய்துள்ளது.
மேலும், முந்தைய 14 நாட்களில் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியில் தங்கியிருந்த ஒரு குடிமகன் வார இறுதியில் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பினால் அது ஒரு குற்றமாகக் கருதப்படலாம்.
விதிகளை மீறுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 66,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அவுஸ்திரேலிய நிர்வாகம் இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து விமான சேவைகள் அனைத்தும் தடை விதித்திருந்தது.
மட்டுமின்றி அவுஸ்திரேலியாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளால் இந்தியாவில் உள்ள சுமார் 9,000 அவுஸ்திரேலியர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருக்கிறார்கள்.