பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று கைதிகள் கைது
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று சிறைக்கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
அந்த வழக்கில், சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, பாரீஸில் அமைந்துள்ள Prison de la Sante என்னும் சிறையில் அடைக்கப்பட்டார் சார்க்கோஸி.
கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்
சிறையிலடைக்கப்பட்ட முதல் நாளே, சிறையிலிருந்த கைதிகள் சிலர் சார்க்கோஸிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததும், சார்க்கோ இங்கேதான் இருக்கிறார், அவருக்கு இங்கே மோசமான நேரம்தான். அவர் தனியாக இருக்கிறார். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள் கடாபிக்காக பழிக்குப் பழி வாங்கப்போகிறோம். வாங்கிய பல பில்லியன் டொலர்களைக் கொடுத்துவிடு என்றெல்லாம் சத்தமிட்டுள்ளனர் அவரது அறையின் அருகிலுள்ள அறையிலிருக்கும் சில கைதிகள்.
மூன்று கைதிகள் கைது
இந்நிலையில், சார்க்கோஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்று முன்தினம், பெயர் வெளியிடப்படாத அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து, சார்க்கோஸியின் பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் 24 மணி நேரமும் அவரது அறைக்கு அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |