பிரித்தானியாவை விட்டு வெளியேற முயன்றால்... கடுமையான புதிய கட்டுப்பாட்டை அறிவித்த ப்ரிதி படேல்
கொரோனா ஊரடங்கை மதிக்காமல் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பயணிகள், முறையான காரணத்தை அறிவிக்க வேண்டும் எனவும், மீறுவோர் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என உள்விவகார செயலாளர் ப்ரிதி படேல் அறிவித்துள்ளார்.
முறையான காரணத்தை அறிவிக்காத பிரித்தானியர்கள் அபராதம் செலுத்த நேரிடும் அல்லது விமான நிலையங்களில் இருந்து குடியிருப்புக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என ப்ரிதி படேல் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியர்களில் சிறு சதவீதத்தினர் கொரோனா ஊரடங்கை மதிக்காமல் தொடர்ந்து விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு வெளியேறும் மக்கள் தங்கள் விமான சேவை நிறுவனத்திடமோ அல்லது தொடர்புடைய சேவை அளிக்கும் நிறுவனத்திடமோ முன்ன்னரே, முறையான காரணத்தை அறிவிக்க வேண்டும் என ப்ரிதி படேல் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி வரும் நாட்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பொலிசார் குவிக்கப்படுவார்கள் எனவும், முறையான காரணம் குறிப்பிடாத பயணிகள், உடனடியாக அபராதம் செலுத்த நேரிடும் அல்லது குடியிருப்புக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றார்.
ஆனால் கடுமையான இந்த புதிய கட்டுப்பாடுகள் எப்போது முதல் அமுலுக்கு வரும் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி விமான சேவை நிறுவனங்கள், சொகுசு கப்பல் நிறுவனங்கள் இது தொடர்பில் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களும் அபராதம் செலுத்த நேரிடும் என்றார்.
இங்கிலாந்தில் உள்ளவர்கள் தேசிய ஊரடங்கின் கீழ் ஒரு நியாயமான காரணத்தைத் தவிர்த்து, ஒரே இரவில் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதிகளை மீறுபவர்கள் முதல் தடவையாக £ 200 அபராதம் விதிக்கப்படுவார்கள்.
அதாவது வேலை அல்லது மருத்துவ உதவி போன்ற சில நோக்கங்களுக்காக இல்லாவிட்டால் இங்கிலாந்திலிருந்து வெளிநாட்டு பயணம் சட்டவிரோதமானதாக கருதப்படும்.
ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் தனித்தனி கொரோனா கட்டுப்பாடுகளும், அதற்குரிய அபராதங்களும் உள்ளன.