பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த சுவிஸ் பெண்: தனிப்பட்ட புகைப்படம் அனுப்பிய பொலிஸ்காரர்
சூரிச் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பொலிஸ்காரர் தனிப்பட்ட குறுந்தகவலுடன் புகைப்படம் ஒன்றையும் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு மாதம் முன்பு நீச்சல் குளம் ஒன்றில் ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு தகவல் அளிக்க, சம்பவயிடத்திற்கு உடனையே பொலிசார் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸ் வாகனத்தை பார்த்ததும், தொல்லை கொடுத்த நபர் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவத்தை விசாரிக்க வந்த இரு பொலிஸ்காரர்களும், தங்களை ஆறுதல் படுத்திவிட்டு, தனிப்பட்ட தகவல்களையும் பதிவு செய்து சென்றதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர், பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க வந்த இரு பொலிஸ்காரர்களில் ஒருவர், புகைப்படம் மற்றும் தனிப்பட்ட குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பியதாக அந்த பெண் வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, புகைப்படம் அனுப்பிய ஒரு நிமிடத்தில், அந்த பொலிஸ்காரர் தவறுதலாக அனுப்பப்பட்டது என கூறி மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த காரணத்தை ஏற்க மறுத்த குறித்த பெண் இந்த விவகாரம் தொடர்பில் மீண்டும் பொலிசார் உதவியை நாடியுள்ளார்.
இருப்பினும், தவறுதலாக நடந்த விடயம் என்றே பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மட்டுமின்றி, குறித்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் இருக்க ஆவன முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.