ICUவில் 100 நாட்கள் இருந்த எங்கள் குழந்தை.. பிரியங்கா சோப்ராவின் உருக்கமான பதிவு
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் தங்கள் குழந்தை 100 நாட்கள் இருந்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அன்னையர் தினத்தையொட்டி முதல் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் தங்கள் குழந்தை முகத்தை யாரும் பார்க்க கூடாது என்பதற்காக எமோஜி மூலம் மறைத்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த அன்னையர் தினத்தில் கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமாக காலத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. 100 நாட்களாக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டில் இருக்கிறார். குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எவ்வளவு விலைமதிப்பற்றது என்பது தெளிவாகிறது. சிகிச்சையளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் நிபுணர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது' என தெரிவித்துள்ளார்.
அதே போல் நிக் ஜோன்ஸ் தனது பதிவில், 'அன்பே, நீ எனக்கும் எல்லா வழிகளிலும் ஊக்கமளித்திருக்கிறாய், மேலும் நீ இந்த புதிய பாத்திரத்தை (அம்மா) மிகவும் எளிதாகவும், உறுதியுடனும் ஏற்றுக்கொண்டிருக்கிறாய். இந்த பயணத்தில் உன்னுடன் இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீ ஏற்கனவே நம்பமுடியாத தாய். மகிழ்ச்சியான தாய்மார்கள் தினம். நான் உன்னை காதலிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.