2,000 கடந்த கைது எண்ணிக்கை... கல்லூரி வளாகங்களில் இறுகும் போராட்டம்
சமீப வாரங்களில் மட்டும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் அமெரிக்க கல்லூரி வளாகங்களில் பொலிசாரின் கைது நடவடிக்கை 2,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது
புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, கைதானவர்கள் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் கூடாரங்களும் பொலிசாரால் அகற்றப்பட்டுள்ளது. மேலும் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்திலும், பஃபலோ பல்கலைக்கழகத்திலும் டசின் கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, நாட்டில் எவருக்கும் போராட உரிமை உள்ளது என்றும், ஆனால் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்தே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முகாம் அமைத்து அங்குள்ள மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர்.
மாணவர்கள் மீது ரசாயனம்
அது தற்போது நாடு முழுவதும் மாணவர் போராட்டங்களை தூண்டியதுடன், 2,000 மாணவர்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் போராட்டத்திற்கு நிர்வாகமே ஆதரவளித்தும் வருகிறது.
இதனிடையே, கலிபோர்னியா பல்கலை வளாகத்தில் புகுந்த பொலிசார், முகாம்களை அப்புறப்படுத்தியதுடன், 200 மாணவர்களை கைது செய்தனர். புதன்கிழமை இரவு கலிபோர்னியா பல்கலையில் 1,000 மாணவர்கள் வரையில் திரண்டிருந்தனர்.
ஆனால் திடீரென்று பல்கலை வளாகத்தில் நுழைந்த பொலிசார் முகாம்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த தொடங்கியுள்ளனர். மாணவர்கள் மீது ரசாயனம் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதனிடையே, மாணவர்களின் இந்த போராட்டம் தற்போது கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் வியாபித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |