சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை: தீர்வு காண முன்வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திட்டம்
சுவிட்சர்லாந்தில் வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. ஆனால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டமோ வேடிக்கைக்குரியதாக அமைந்துள்ளது.
நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து வீடு
அதாவது, வாடகைக்கு வரும் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளார்களோ, அதைப் பொருத்தே அவர்களுக்கு எத்தனை அறைகள் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவது என முடிவு செய்யலாம் என வாடகைக்கு இருப்போர் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
ஒருவர் மட்டுமே வீடு ஒன்றில் வாடகைக்கு இருக்க முடிவு செய்தால், அவருக்கு இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடும், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, ஐந்து அறைகள் உள்ள வீடும் வாடகைக்கு விடப்படும்.
தனி நபர்களுக்கு இரண்டு அறைகளுக்கு மேல் உள்ள வீடு வாடகைக்குக் கொடுக்கப்படாது.
எழுந்துள்ள சர்ச்சை
இந்த திட்டம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உதாரணமாக, ஒரு வீட்டில் வாழ்பவர்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டால் மற்றவர்களை காலிபண்ண வைத்துவிடுவார்களா?
ஒரு தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?
இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளதுடன், இந்த திட்டம் சொத்துரிமைகளை பெரிய அளவில் மீறுவதாகவும் சுவிஸ் வீட்டு உரிமையாளர்கள் கூட்டமைப்பு கருதுகிறது.