கணவர் படுகொலை.... சிக்கலில் சுவிஸ் குத்துச்சண்டை வீரர்
சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் பிரபல குத்துச்சண்டை வீரர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தமக்கு அதில் தொடர்பில்லை என மறுத்து வருகிறார்.
பிரேசில் நாட்டவரான Viviane சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வருவதுடன், குத்துச்சண்டை பயிற்சியும் அளித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் இவரது கணவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆனால் தமது கணவரை Viviane கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக் கைதியாக உள்ளார். தமது கணவர் கொலையில் தமக்கு தொடர்பு இல்லை என அவர் வாதிட்டு வந்தாலும், அவருக்கு எதிரான 7 ஆதாரங்களை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் தங்கியிருந்த குடியிருப்புக்கான இன்னொரு சாவி Viviane வசம் இருந்துள்ளது மட்டுமின்றி, சம்பவத்தன்று கதவு வலுக்கட்டாயமாக திறந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை. கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பேஸ்பால் மட்டை, அது Viviane பயன்படுத்துவது எனவும், அவரது காரில் அது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக அவரது மகனே பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த அன்று மாலை தமது குடியிருப்பில் இருந்ததாக Viviane கூறியுள்ள நிலையில், Interlaken பகுதியில் அவரது சிவப்பு நிற வாகனத்தை பார்த்ததாக ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
மட்டுமின்றி கொல்லப்பட்ட கணவரின் மொபைல் போனில் இவரது டி.என்.ஏ மாதிரிகளை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். தமது கணவர் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து தாம் மயக்கமுற்று விழுந்ததாக கூறும் Viviane, அவரது காலணியில் இரத்தம் தெறித்திருந்ததை பொலிசார் உறுதி செய்திருந்தனர்.
மேலும், இறந்தவரின் டிராக் ஜாக்கெட்டில் Viviane-ன் டி.என்.ஏ மாதிரிகளை பொலிசார் கண்டுபிடித்தனர். பேஸ்பால் மட்டையால் சுமார் 19 முறை தலையில் தாக்கப்பட்டு, உடலிலில் அதே எண்ணிக்கையில் தாக்கப்பட்ட நிலையிலேயே குத்துச்சண்டை வீரரின் கணவர் கொல்லப்பட்டுள்ளார்.
இது உணர்ச்சி மிகுதியால் நடந்திருக்கலாம் என்றே பொலிசார் கருதுகின்றனர். அவரது திருமண மோதிரம் அவர் பக்கத்திலேயே காணப்பட்டதே அதற்கு காரணமாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Viviane கொலை செய்திருக்கலாம் என ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் நம்பினாலும், அவர் குடியிருப்பில் அல்லது அவர் பயன்படுத்திய வாகனத்தில் இரத்தம் படிந்திருந்ததாக பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் இந்த கொலைக்கு தமது கணவரின் நீண்ட கால நண்பரே காரணம் என Viviane குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்படியான ஒருவரை பொலிசார் இதுவரை அடையாளம் காணவில்லை என்றே தெரிய வந்துள்ளது.