கனேடிய பணி உரிமம் வழங்குதல் தொடர்பில் புலம்பெயர்தல் துறை அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதி
கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர், கனேடிய பணி உரிமம் வழங்குவதை விரைவுபடுத்த முயற்சி எடுக்க இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த வாரம், Standing Committee on Citizenship and Immigration என்னும் கமிட்டியுடனான சந்திப்பின்போது, புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது 85 மில்லியன் டொலர்கள் பட்ஜெட்டை கொரோனாவால் தாமதமான பரிசீலனை நேரத்தை விரைவாக்குவதற்காக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
2022 இறுதிவாக்கில், பணி உரிமங்கள், கல்வி உரிமங்கள், குடியுரிமை ஆதாரம் மற்றும் நிரந்தர வாழிட உரிம அட்டை ஆகியவை பரிசீலிக்கப்படுதல் சகஜ நிலையை அடையும் என்று கூறியிருந்தார்.
Standing Committee on Citizenship and Immigration என்பது, கனடாவிலுள்ள பல்வேறு பெரிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு குழு ஆகும். அது, புலம்பெயர்தல் அமைப்பை மேம்படுத்துவது எப்படி என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தி பரிந்துரைகள் செய்யும் ஒரு குழு ஆகும்.
கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளம், பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பணி உரிமங்கள் பரிசீலிக்கப்படும் வழக்கமான காலகட்டத்தில் தற்போது அவை பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இப்போது ஏராளமான பணி உரிமங்களை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பரிசீலித்து வருகிறது. 2021இல் கனடா International Mobility Program (IMP) என்ற திட்டம் மற்றும் Temporary Foreign Worker Program (TFWP) என்ற திட்டங்களின் கீழ் 420,000 பணி உரிமங்களை வழங்கியது.
TFWP என்பது, கனடாவில் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை வெளிநாட்டவர்களைக் கொண்டு நிரப்ப கனேடிய தொழில் வழங்குவோரை அனுமதிக்கும் ஒரு திட்டம். IMP என்பது, கனடாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தேவைகளை மேம்படுத்தும் திட்டமாகும்.
வழக்கமாக, கனடாவுக்கு வெளியே இருந்து விண்ணப்பிக்கப்படும் பணி உரிம விண்ணப்பங்களைப் பரிசீலிக்க 60 நாட்கள் ஆகும், அதுவே, International Experience Canada (IEC) பணி உரிமங்கள் என்றால், 56 நாட்கள்தான் ஆகும். பணி உரிம நீட்டுப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்க 120 நாட்கள் ஆகும். பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தின்போது, இத்தகைய விண்ணப்பங்களில் 87 சதவிகிதம் நேரத்துக்கு பரிசீலிக்கப்பட்டுவிட்டன.
2020இல், பெருந்தொற்று தாக்கியபோது, உலகம் முழுவதிலுமான கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக, பரிசீலிக்கப்பட வேண்டிய விண்ணப்பங்கள் ஏராளம் குவிந்துவிட்டன.
பிப்ரவரி 1ஆம் திகதி நிலவரப்படி, 85,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிட்ட நிலையில், தற்போது அவற்றை பரிசீலிக்கும் நேரத்தை விரைவுபடுத்த ஆவன செய்ய இருப்பதாக கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.