கனடாவுக்கு உதவுவதாக வாக்குறுதி... சீனாவுக்கு எச்சரிக்கை: உலக தலைவர் ஒருவருடனான அமெரிக்க அதிபரின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு
தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை கனடா பிரதமருடன் தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் சந்திப்பிலேயே சீனாவை எச்சரித்துள்ளார்.
சீன தகவல் தொடர்பு நிறுவனமான Huaweiயின் தலைமை செயல் அலுவலரான Meng Wanzhou என்னும் பெண் மீது, வங்கி மோசடி முதலான பல குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தியிருந்தது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், அவர் வான்கூவரில் வைத்து கனேடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
உடனே, பழிவாங்கும் நடவடிக்கையாக, சீனாவில் பணியாற்றிவந்த Michael Spavor மற்றும் Michael Kovrig என்னும் இரண்டு கனேடியர்களை, வேவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்தது சீனா.
ஆகவே, அவர்கள் இருவரையும் விடுவிக்குமாறு சீனாவை எச்சரித்த ஜோ பைடன், அதே நேரத்தில், அவர்களை பத்திரமாக மீட்க உதவுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வாக்களித்தார்.
காணொலிக் காட்சி மூலம் ஒரே நேரத்தில் ட்ரூடோவிடமும் பத்திரிகையாளர்களிடமும் பேசிய ஜோ பைடன், அவர்களை பத்திரமாக மீட்க நாம் இணைந்து செயலாற்றப்போகிறோம் என்றார்.
ஜோ பைடனுக்கு பதிலளித்த ட்ரூடோ, அவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இருவரும் தொடர்ந்து பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் முதலான விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தனர்.