மனிதர்கள் 200 ஆண்டு வாழ முடியுமா? திமிங்கலத்தின் புரதத்தை வைத்து நடைபெறும் ஆய்வு
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 73 ஆண்டுகளாக உள்ளது. மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
தற்போது இது தொடர்பான ஆய்வில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
திமிங்கலத்தின் CIRBP புரதம்
ரோசெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 200 ஆண்டுகள் வாழக்கூடிய போஹெட் திமிங்கலங்களை(Bowhead whales) ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், CIRBP என்னும் புரதம் மற்ற பாலூட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்த போஹெட் திமிங்கலங்களிடம் 100 மடங்கு அதிக அளவில் காணப்பட்டதே அதன் ஆயுள் நீட்டிப்பிற்கு காரணமாக கருதப்படுகிறது.
மரபணுச் சேதம் நோயை ஏற்படுத்தி, ஆயுட்காலத்தையும் குறைக்கக்கூடும் இரட்டை இழை முறிவுகளைச் சரிசெய்வதில் இந்த புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த புரதத்தை பழ ஈ மற்றும் மனித செல்களில் செலுத்தி சோதித்து பார்த்ததில், மரபணுச் சீரமைப்புப் பணிகள் மிக வேகமாக நடந்தது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வழக்கமான ஈக்களை விட இந்த புரதங்கள் சேர்க்கப்பட்ட ஈ நீண்ட ஆயுளுடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
போஹெட் திமிங்கிலங்கள் உறைபனி மிகுந்த ஆர்க்டிக் கடற்பரப்பில் வாழ்வதால் அந்த இயற்கையான குளிர் சூழல் CIRBP புரதத்தின் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதே போல், மனிதர்களில் CIRBP அளவை அதிகரிப்பதற்கு, குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களை விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்றும் எச்சரிக்கின்றனர்.
தற்போது மனித ஆயுட்காலத்தை நீடிப்பது 200 ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை என்றாலும், ஆயுட்கால நீட்டிப்பு தொடர்பான ஆய்வில் இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |