புதிய சட்டம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை: கொந்தளிக்கும் பிரான்ஸ் உணவகத்துறை
உணவகத்துக்கு வருபவர்களுக்கு வாய்க்கு ருசியாக உணவு கொடுக்கவேண்டும், நமக்கு நல்ல பெயரும் வருவாயும் வரவேண்டும் என்பது மட்டும் தங்கள் நோக்கமில்லை என்பதை நிரூபிக்க களமிறங்கியிருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டு உணவகத்துறையினர்!
புதிய சட்டம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
பிரான்ஸ் அரசு, முன்னர் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்தொன்றை, மீண்டும் விவசாயத்தில் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் ’Duplomb law’ என்னும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர உள்ளது.
அந்த பூச்சி மருந்தின் பெயர் acetamiprid. இந்த acetamiprid புற்றுநோயை உருவாக்கக்கூடியது, வளரும் பிள்ளைகள் உடலில் நரம்பு வளர்ச்சிக் குறைபாடு முதலான பல்வேறு பிரச்சினைகளை அது ஏற்படுத்தக்கூடும் என்பதால், 2018ஆம் ஆண்டு அந்த மருந்திற்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல்வாதிகள் அந்த பூச்சி மருந்தை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கும் Duplomb law என்னும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்கள்.
விவசாயிகளுடன் கைகோர்த்துள்ள உணவகத்துறையினர்
வியப்பூட்டும் வகையில், பொதுவாக, பிரான்சில் பொது விடயங்களில் பெரிய அளவில் பங்கேற்காத பல மூத்த உணவியல் வல்லுநர்கள், ஹொட்டல் உரிமையாளர்கள், இந்த சட்டத்தை எதிர்த்து, இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகளுடன் கைகோர்த்து களமிறங்கியுள்ளார்கள்.
மக்களுக்கு உணவளிக்கும் தொழிலில்தான் எங்கள் உணவகங்கள் ஈடுபட்டுள்ளன, மக்களுக்கு நாங்கள் விஷம் கொடுக்கமாட்டோம் என்கிறார்கள் உணவகத் துறையினர்.
இதற்கிடையில், அந்த சட்டத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளோர் எண்ணிக்கை பல மில்லியன்களை தாண்டிவிட்டது.
இந்த விடயம் பிரான்சில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை உருவாக்கிவரும் நிலையில், இந்த சட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கையெழுத்திடுவது தொடர்பில் பிரான்ஸ் மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 64 சதவிகித மக்கள், மேக்ரான் அந்த சட்டத்துக்கு கையெழுத்திடமாட்டார் என்றும், அது தொடர்பில் புதிய விவாதம் ஒன்றிற்கு அவர் அழைப்பு விடுப்பார் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சட்டம் குறித்து முடிவெடுக்கும் முன், அரசியல் சாசன கவுன்சிலின் தீர்ப்புக்காக தான் காத்திருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன கவுன்சிலின் தீர்ப்பு, ஆகத்து மாதம் 7ஆம் திகதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |