'நாங்கள் பன்றிகள் அல்ல' கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டம்!
பிரான்சில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டாய தடுப்பூசி மற்றும் தடுப்பூசி கடவுச்சீட்டுக்கு எதிராக தலைநகர் பாரிஸ் உட்பட மர்சேய், லியோன், மான்ட்பீலியர், நான்டெஸ் மற்றும் டூலூஸ் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் சுமார் 150 இடங்களில் தனித்தனி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
நகரங்கள் முழுவதும் புகையும், கலவரமுமாக போர்க்களம் போல் காட்சியளித்தன.
நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மக்கள் அணிதிரண்டு, 'நாங்கள் ஒன்றும் கினி பன்றிகள் அல்ல' , தடுப்பூசி போடுவதும் போடாததும் 'அது எங்கள் விருப்பம்' என கையில் பலகைகளை ஏந்தி, பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில், காவல் துறையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸாரை கருமையாக தாக்கினர். இரு தரப்பிலும், பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, பாரிசில் 10 பேர் உட்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.