Frexit வேண்டும்... பிரான்ஸ் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
ஐரோப்பிய ஒன்றியமும், அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பான Mercosur என்னும் அமைப்பும், இம்மாதம் 12ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
Mercosur ஒப்பந்தம் என்னும் அந்த ஒப்பந்தத்தின்கீழ், தென் அமெரிக்க உணவுப்பொருட்கள் எளிதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படமுடியும்.

ஆனால், அதற்கு பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். அந்த ஒப்பந்தம், மலிவான, ஐரோப்பிய ஒன்றிய உணவு மற்றும் சுற்றுச்சுழல் தரநிலைகளுக்கு ஏற்றவையாக இல்லாத உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வழிவகை செய்யும், உள்ளூர் பொருட்களுக்கு நியாயமற்ற வகையில் போட்டி உருவாகிவிடும் என அவர்கள் கூறிவருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாகவே, ஐரோப்பிய ஒன்றியம் பிரெஞ்சு விவசாயத்தை அழித்து வருகிறது என்றும், பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும், பிரான்ஸ் தன்னைத்தான் நிர்வகித்துக்கொள்ளவேண்டும் என்றும் கோரி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய விடயம் Brexit என அழைக்கப்படுகிறது. அதேபோல, தங்களுக்கு Frexit வேண்டும், அதாவது பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என பிரான்ஸ் மக்கள் குரல் எழுப்பத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |