பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - ஜனாதிபதி பணிப்புரை
தொழில்நுட்ப தரவுகளை மாத்திரம் நம்பியிருக்காமல், இடத்திலேயே தகவல்களை சேகரித்து, அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு வலுவான அடிமட்ட பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார் என்று ஜனாதிபதியின் ஊடகம் (PMD) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பேசப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுவதையும், அத்தியாவசிய உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், நிவாரணப் பணிகளுக்கு போதிய நிதியை ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இச்சந்திப்பின் போது, பாதகமான காலநிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநலம் மற்றும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் ஆலோசனை வழங்கினார்.
தற்போது கடலில் இருக்கும் மீனவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் பணிப்புரை விடுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கான தொடர் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        