குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: மகன் இறந்த தகவலை டிவியில் பார்த்து மயங்கி விழுந்த தாயார்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் விங் கமாண்டர் உயிரிழந்த செய்தியை டிவியில் பார்த்த அவர் தாயார் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலையில் அவரின் மொத்த குடும்பமும் துயரத்தில் மூழ்கியுள்ளது.
குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் என உயிரிழந்த 13 பேரில் விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானும் ஒருவர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக கடந்த செவ்வாயன்று இரவு தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் அது தான் தனது மகனுடன் பேசும் கடைசி உரையாடல் என்பதை அப்போது சுசிலா அறிந்திருக்கவில்லை. மறுநாள் மதியம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பி.எஸ்.சவுகான் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த செய்தியை, பி.எஸ்.சவுகானின் மாமனார் தொலைபேசி மூலம் சவுகானின் தாயிடம், தெரிவித்து டிவியை பார்க்குமாறு கூறியிருக்கிறார்.
டிவியை பார்த்த அவர், தனது மகன் சென்ற ஹெலிகாப்டர் நொருங்கி விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற ரீதியில் இருந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாயார் அப்படியே கீழே விழுந்து மயங்கினார். இந்த கோர விபத்தில் மறைந்த விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானுக்கு மனைவி, 12 வயதில் மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
சவுகான் குடும்பத்தில் இளைய மகன், அவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். சவுகானின் மூத்த சகோதரிகளுள் ஒருவரான மினா சிங் கூறுகையில், 31 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டில் தான் ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரிகள் அனைவரும் என் தம்பியை சந்தித்து அளவளாவினோம்.
நாங்கள் என்ன கேட்டாலும் எங்களுக்காக கேட்டதை வாங்கி வந்துவிடுவான் என உணர்ச்சிவசமாக கூறியுள்ளார்.