தார்ப்பாயால் சுற்றப்பட்டு பெண்ணின் சடலம்... விசாரிக்க சென்ற சகோதரர் படுகொலை: இளைஞரின் கொடூரம்
அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் அண்டைவீட்டு பெண்மணியை வீடு புகுந்து கொலை செய்துவிட்டு, விசாரிக்க சென்ற அவரது சகோதரரையும் படுகொலை செய்துள்ள இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் 29 வயதான Luke David Fawcett என்பவருக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தாம் நிரபராதி என்றே Luke David Fawcett தொடர்ந்து தெரிவித்து வருகிரார்.
கடந்த 2020ம் ஆண்டு ஈஸ்டர் சனிக்கிழமையில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 66 வயதான Marie Collins என்பவரது வீட்டுக்கு சென்ற Luke David Fawcett அவரை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துள்ளார் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஈஸ்டர் ஞாயிறன்றும் தமது சகோதரியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என அறிந்த 62 வயதான Wayne Johsnon குடியிருப்புக்கே சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் Fawcett-ன் கொடூர தாக்குதலுக்கு இலக்கான அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். Marie Collins-ன் சடலம் அவரது குடியிருப்பின் வாசலிலேயே ஒரு நீல வண்ண தார்ப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் Fawcett-ன் காருக்குள் பரிசோதிக்கையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது மொபைல் போனில், தொடர்புடைய தாக்குதலுக்கு ஒத்திகை பார்த்துள்ளதும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான தரவுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
கைதான இளைஞருக்கும் கொல்லப்பட்ட இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏதும் இல்லை என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எந்த காரணமும் இன்றி Marie Collins மற்றும் அவரது சகோதரர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அவரது வங்கிக்கணக்கை பயன்படுத்திக்கொள்ளவும், அவருக்கு சொந்தமான குடியிருப்பை தனதாக்கிக் கொள்ளவும் Fawcett இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் Marie Collins கொலையில் தமக்கு தொடர்பில்லை எனவும், தம்மை தாக்க முயன்றதாலையே தற்காப்புக்காக Wayne Johsnon-ஐ தாக்கியதாகவும் Fawcett விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.